மறக்க முடியுமா கலைஞரை! திரைத்துறையினர் புகழ் வணக்கம்
நடிகர் ராஜேஷ்
மக்கள் தொடர்பு சாதனங்கள் 6 உள்ளன. அவைதாம், மக்களிடம் கருத்துகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. பத்திரிகை, அரசியல், நாடகம், மேடை, சினிமா, டி.வி. என இன்றைய நவீன, மக்கள் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும் கடைசிவரை எதிர்கொண்டவர், கலைஞர். அனைத்துத் தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்ற தலைவர் அவர். எதிர்த்தவர்களும் பாராட்டினார்கள். அவர் எந்தச் செயலையும் ஆற்றியதில் சோம்பல் கிடையாது; தூக்கம் கிடையாது; மறதி என்பதை அவரிடம் நான் பார்த்ததே கிடையாது.
நடிகர் மயில்சாமி
கலைவாணர் முதல் விவேக் வரை, பல நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தவர் கலைஞர் அவர்கள். அவருடைய நகைச்சுவை எப்போதும் சிறப்பானது.
ஒரு முறை எம்.ஆர்.ராதா அவர்களிடம் கலைஞர் அவர்கள், சம்பாதிச்சதையெல்லாம் சேர்த்து வச்சிருக்கீங்களா? என்று கேட்கிறார். எம்.ஆர்.ராதா அவர்கள் அதற்கு, எல்லாம் மண்ணாப் போச்சு என்று சொல்ல உடனே கலைஞர் அவர்கள், அப்படின்னா நிறைய நிலம் வாங்கிப் போட்டிருக்கீங்களா என்று கேட்டிருக்கிறார். அந்த உடனடி நகைச்சுவை அவரிடம்தான் உண்டு. நடிகர் விவேக் தமது பிறந்த நாளுக்கு வாழ்த்துப்பெற வந்தபோது, வயதைச் சொல்லி வாழ்த்துக் கேட்க, என்கிட்டேயாவது உண்மையைச் சொல்லக்கூடாதா என அப்போதும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
கலைஞர் டி.வியில் என்னுடைய ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அழைத்தவர், தினமும் உன்னைப் பார்த்துவிட்டு, சிரிச்சிட்டுத்தான்யா தூங்குறேன் என்றார். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.
நடிகர் ராதாரவி
சினிமாவில் கதாநாயகர்களுக்குப் பட்டம் தந்து மரியாதை தந்த காலத்தில், ஒரு எழுத்தாளனுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘கலைஞரின் கைவண்ணத்தில்’ என்று, முதன் முதலில் பெயர் போடச்செய்த பெருமை கலைஞருக்குத்தான் உண்டு. அதுதான் அவருடைய எழுத்தின் ஆற்றல்
தெலுங்கு நடிகர் மோகன்பாபு
தேசத்தந்தை மகாத்மா காந்தி 1924ல் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றார். அதே ஆண்டில் தமிழ்த் தந்தை ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதை நாம் அறியவில்லை. அவர்தான் கலைஞர்அவர்கள். நாங்கள் நடிகர்களாக வளர்ந்தபோது தமிழ்நாட்டில் அரசியல் சிறப்பாக இருந்தது. ஒரு ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா வரிசையில் நாங்கள் மதிக்கும் தலைவர், கலைஞர் அவர்கள். ‘மு.கருணாநிதி’ என்ற பெயரில் ‘மு’ என்றால் முன்னுதாரணம், ‘க’ என்றால் கருணை, ‘ரு’ என்றால் ருத்ரம், ‘நா’ என்றால் நாத்திகம், ‘நி’ என்றால் நிதானம், ‘தி’ என்றால் திராவிடம்.
நடிகர் பிரபு
எனக்குத் திருப்புமுனை தந்த படங்களில் ஒன்று கலைஞரின் ‘பாலைவன ரோஜக்கள்’. அதன்பிறகு, ‘காவலுக்குக் கெட்டிக்காரன்’ படத்தில் ‘ஆன்ட்டனி – கிளியோபாட்ரா’ வசனம் எழுதி, அதை பெரியப்பா கலைஞரே படித்து ஆடியோவாகக் கொடுத்தார். அதை அப்பாவிடம் கொடுத்ததும் அவரும் ஓர் ஆடியோவாகப் பேசினார். ‘பேரழகி கிளியோபாட்ரா என் உள்ளத்தில் கொலு வீற்றிருக்கும்போது, போர்முனையில் எதிரிகளைப் பந்தாடுவதற்கு வீரம் தானாகவே வரும்’ என்று பெரியப்பாவும், அப்பாவும் பேசிய ஆடியோ என்பது, இதுதான் தமிழ் என்பதைக் காட்டியது.
தமது நண்பன் சிவாஜிக்குச் சிலை வைக்க வேண்டும், அதை அவர் அறிவித்த அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று இரவு பகலாக அவர் தவித்த தவிப்பை நாங்கள் அறிவோம். அந்தச் சிலையை இப்போது வேறு இடத்தில் வச்சிட்டாங்க. ஆனாலும், அது பெரியப்பா வைத்த சிலைதான் என்பதை மறக்கமாட்டோம். அதற்கு நன்றி சொல்ல என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
நடிகை ராதிகா
நான் தி.மு.க. வில் உறுப்பினராக இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், கலைஞர் என்ற தலைவரால் ஏற்பட்ட தமிழார்வத்தால் 1989ல் துறைமுகம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மேடையேறிப் பேசினேன். முரசொலி மாறன் அவர்கள் கூட, பீரங்கிக் கப்பல் ராதிகா புறப்பட்டு விட்டது என்று ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஊர் ஊராக, தெருத் தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று விடிய விடியப் பிரச்சாரம் செய்தோம். வெற்றி கிடைத்தது. கலைஞர் அவர்கள் வெற்றி – தோல்வி இரண்டிலும் கலங்க மாட்டார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்வது, கலைஞரின் பெரும் பலம். தமிழினம் – தமிழுணர்வு இருக்கும்வரை கலைஞர் அவர்களை மறக்க முடியுமா? மறக்கவே முடியாது.
இயக்குனர் பார்த்திபன்
அனைவருக்கும் சூரிய வணக்கம். மரணம் துயரமானது. கலைஞரின் மரணம் உயரமானது. எழுத்தால் விட்டம் தொட்டவர். எழுந்தால் விண்ணைத் தொட்டவர். தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞரை இழந்ததால் அந்தத் தமிழுக்கே உயிர் போனது. இங்கே இருப்பவர்கள் கலைஞரின் உடன்பிறப்புகளல்ல. உயர் பிறப்புகள். கறுப்பு – சிவப்பு என் கண்களில் இருக்கும். எந்தக் கரை வேட்டியும் கட்டாத நான் கலைஞர் வாழ்க! என்று சொல்வதுதான் முக்கியமானது.
நடிகர் பிரகாஷ்ராஜ்
கன்னட மொழியைத் தமிழில் எழுதி, பேசி வந்த எனக்கு, கலைஞரைப்போல தமிழ் பேசி நடிக்கவேண்டிய வாய்ப்பு வந்தது. அவர் தமிழை அறிய, ‘பராசக்தி’யைப் பார்த்தபோது பயமுறுத்தவில்லை. நம்பிக்கை தந்தது.
கலைஞரின் தமிழில் பண்பாடு இருந்தது. தன்மானம் இருந்தது. உரிமைக்கான போராட்டம் இருந்தது. அவரது இலக்கியத் தமிழ் தென்றலாக இருந்தது. அரசியல் தமிழ் புயலாக இருந்தது. அதைப் பேசி நடித்ததால் எனக்குத் தேசிய விருது கிடைத்தது.
ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! என அச்சுறுத்துபவர்களிடமிருந்து நம்மையெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தவர் கலைஞர் அவர்கள் என்பதை, அவர் மரணத்தில்தான் உணர்கிறோம்.
காந்தி என்றால் அகிம்சை என்பதுபோல, கலைஞர் என்றால் சமூக நீதி நினைவுக்கு வரும். சுயமரியாதையுடன் கூடிய சமூக நீதிக்காகத் தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் கலைஞர் அவர்கள். உங்கள் புன்னகை எத்தனை அழகாக இருந்தாலும், அதை என் உதட்டில் ஒட்டாதீர்கள் என மாநில உரிமைக்காக அவர் எழுப்பிய முழக்கம் இந்தியாவுக்கே வழிகாட்டிடும்
வரிகளாகும். கலைஞரின் மரணம் வெறும் கண்ணீர் அஞ்சலிக்குரியதல்ல. வரலாற்றுச் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் புகழஞ்சலி. ஒரு நூற்றாண்டின் கலைஞர். பல நூற்றாண்டுகளின் தலைவர். அவரிடமிருந்து போராடும் வலிமை கிடைக் கிறது. ஒரு தலைவனிடமிருந்து வேறென்ன வேண்டும்?
நடிகர் நாசர்
எங்கு மனிதம் இருக்கிறதோ, அங்கெல் லாம் கலைஞர் இருக்கிறார். ‘பராசக்தி’ வசனம் அபூர்வக் கலவை. ஓர் எழுத்தாளனின் வலிமை, நடிகரின் வெளிப்பாடு. அந்த வீச்சுதான் நம்மைத் தாக்கியிருக்கிறது. என் திரைப்பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது.
5 படைப்புகளில் அவருடன் நான் பயணித்திருக்கிறேன். எழுதிக் கொடுப்பது மட்டுமல்ல, எப்படிப் படமாக்க வேண்டும் என்பதிலும் கலைஞர் அவர்கள் கவனம் செலுத்துவார்.
ஒரு நடிகனுக்கு எந்த வேலையும் இல்லை. கலைஞர் அவர்கள் சொன்னதை மட்டும் செய்தால் போதும். களைப்புற்றார் – ஓய்வுற்றார் என்ற இரண்டு வார்த்தைகளை, அவர் வாழ்க்கையில் எங்குமே சேர்க்கவே முடியவில்லை. அதுதான் கலைஞர். அவரைக் கொண்டாட வேண்டும்.
நடிகர் சத்யராஜ்
உடன்பிறப்புகளே! என்று தொண்டர் களை அழைக்கிற கலைஞர் அவர்கள், தம்மை எப்படி அழைத்துக் கொள்வார் என ஒரு பேட்டியில் கேட்டபோது, ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ என்று சொல்லி, உண்மையான பெரியார் தொண்டர் என்று நிரூபித்தவர் கலைஞர். கோப்புகளில் Beg to submit
என்று இருந்ததில், Beg என்பது கெஞ்சுவதாக இருக்கிறது என்று சொல்லி, அதனை அகற்றச் சொல்லியவர் கலைஞர்.
‘பெரியார்’ படத்தில் நான் நடிக்கும் போது, பெரியார் எப்படிப் பேசுவார் என எனக்குச் சொல்லிக் கொடுத்து, நடிக்கச் செய்தவர் கலைஞர். அவர் ஒரு மனிதரல்ல. சமூக நீதிக்கான தத்துவம். அவருக்கு இறப்பு கிடையாது. எப்போதும் நம்முடன் இருக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜா
நடிகர் திலகமும், கலைஞரும் இல்லை யென்றால் இந்தப் பாரதிராஜாவே இல்லை. அகநானூறு, புறநானூறு, திருக்குறள் அனைத்தும் அவரிடம் எளிமையாக இருக்கும். தமிழ் என்றால் கலைஞர், கலைஞர் என்றால் தமிழ். அவர், மொழி காத்த தமிழன், இனம் காத்த தமிழன்.
கோடானுகோடி இதயங்களில் சிம்மாசன மிட்டிருக்கிற தமிழன். மனிதாபிமானமுள்ள மனிதன். வீரமுள்ள தமிழன். அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள், தமிழக அரசு கொண்டாடிய, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கலைஞரே உங்களுக்கு மரணமில்லை.
நடிகர் சிவகுமார்
‘பராசக்தி’யில் இரண்டரை மணி நேரப் படத்தைக் கடைசி 4 நிமிடக் காட்சிகளில் கோர்ட் சீனாக வைத்து, மொத்த திரைப்பட உலகையே மாற்றியவர் கலைஞர் அவர்கள். தம் கொள்கைகளை எப்படியாவது சாமர்த்தியமாகப் படத்தில் சேர்த்து விடுவார். “சாக்ரடீஸ்” நாடகத்தில் அதைச் சொல்லியிருப்பார். தரம் குறையாத கருத் துகள்; தங்கம் போன்ற கொள்கைகள். மொழி எனக்கு மட்டும் உரியதல்லவே! அவர்களும் பேசட்டுமே பேசிப்பார்க்கட்டும் என்று அப்போதே சொல்லியிருப்பார். அரசியல் – கலை – இலக்கியத்தில், கலைஞரை எக்காலத்திலும் யாரும் அசைக்க முடியாது.