அரசியல் ஆளுமை கலைஞர்!
திரு.கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
தந்தைப் பெரியாரின் துணிச்சலையும் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனிவையும் கொண்ட மானமிகு சுயமரியாதைக்காரர்தான் நம்முடைய இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள். நம்மைப் பொறுத்தவரையில் தலைவர் கலைஞர் அவர்கள் மறையவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்தவராகிவிட்டார். அவரது இலட்சியங்களை நாம் வென்றெடுக்க வேண்டும். திமுக வெறும் அரசியல் கட்சியல்ல. சமுதாயக் கொள்கைகள்தான் அதனுடைய அடித்தளம்.அந்த இலட்சியத்தைக் கட்டுப்பாடு காத்து விரும்பிய பணி முடிக்க சூளுரை ஏற்போம்.
திரு.வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
ஏழை எளிய, பள்ளிப் படிப்பையும் முடிக்க இயலாத வழியில் வந்தவர்தான், இன்றைக்குப் பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். அதற்குக் காரணம், அவரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற கொள்கையே. கடலுக்கு அலை எப்படி ஆதாரமோ, அதைப்போல அவருக்கு உழைப்பு ஆதாரம். தமிழ்நாட்டில் எலியும் பூனையுமாக இருந்த தலைவர்கள் இணைந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இதுதான் கலைஞரின் ஆளுமை. 1975ல் அவசர நிலையை உள்ளே அனுமதிக்கமாட்டேன் என்று தம் ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தே கம்பீரமாக முழக்கமிட்டு ஆட்சியைப் பறிகொடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய தலைவரே கலைஞர்.
திரு.தமிழிசை சௌந்திரராஜன், மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா
குறளோவியம், பராசக்தி எழுதிய தலைவர், குரலெழுப்பிய தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர். நடக்க முடியாததையும் நடத்திக் காண்பித்தவர் டாக்டர் கலைஞர். அவரிடம் இருந்த தமிழ் மொழியின் ஆளுமைதான், அவரை அரசியலில் ஆளுமை ஆக்கியது. ஐயா வீரமணி பக்கத்தில் என்னை அமர வைத்தவர் கலைஞர். அவரின் உடலோடு போர்த்தப்பட்ட தேசியக்கொடி மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரால் ஏற்றப்பட வேண்டும் என்ற உரிமையை வாங்கித் தந்தவர் கலைஞர்
திரு.சு.திருநாவுக்கரசர் மாநிலத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்
1977ல் கலைஞருக்கு ரத்த வாந்தி என்று பேப்பரில் செய்தி வந்ததைப் பார்த்துவிட்டுப் பதறிப் போய் மருத்துவமனைக்கு நண்பர்களுடன் ஓடோடிப் போய் அவரைப் பக்கத்தில் நின்று பார்த்தேன். 1978ல் என் கல்யாணம் நடந்தது. எம்.ஜி.ஆர் தலைமையில் என்று சொல்லி, கலைஞரை ‘அழைச்சப்ப’, ‘அதனால் என்னய்யா, அவர் வரட்டும், நான் ஒரு ஓரமா வந்திட்டுப் போறேன்யா’ எனச் சொன்ன பெருந்தன்மை கொண்டவர். 1991ல் தி.மு.க.விற்குச் சோதனையான கட்டம். போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோற்றார்கள். அவர் மட்டுமே வென்றார். தோல்வியே காணாதவர். மக்களுக்கு நல்ல காரியம் செய்ததைப் போல் கட்சிக்கும் நல்ல காரியம் செய்தவர். இப்படிப்பட்ட தலைவரை எத்தனை ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகு பார்க்கப் போகிறோமோ?
திரு.ஆர்.முத்தரசன் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்
எந்தப் பின்னணியும், உதவியுமின்றி வளர்ச்சியற்ற பின்தங்கிய கிராமத்தில் பிறந்த எளியவர் உலகப் புகழைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், பலரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் போராடிய போராளிதான் கலைஞர். ஒருமுறை எங்கள் ஊருக்குக் கொடி ஏற்ற வந்த கலைஞர், கூட்டத்தின் ஓரத்தில் நின்ற ஒரு தொண்டனை அழைத்துக் கொடி ஏற்ற வைத்து. அடிமட்டத் தொண்டனையும் மதித்த கண்ணியத் தலைவராக விளங்கினார். ‘ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கையிலே – உனக்குத் தேரோட்டம் எதற்கு தியாகராஜா’ என்று கேட்டவர் கலைஞர்.
திரு.கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
93 வருடங்கள் ஓயாமல் உழைத்தவர் கலைஞர். “எனக்கே வேதனையாயிருக்கு, போதும் வந்துவிடு’’ என்று இயற்கை மண்டியிட்டு மன்றாடி, மடிப்பிச்சை கேட்கிறேன் என்று போராடித்தான் கலைஞரை அழைத்துச் சென்றிருக்கிறது.
திரு.ஜி.கே.மணி தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி.
கலைஞர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் ஒதுக்கியவர். காரசாரமான விவாதங்களில் கூட எதிர்க்கட்சிகள் மனம் நோகும்படி அவர் நடந்துக்கொண்டது இல்லை. அந்த ஜனநாயகப் பண்புதான் இன்று அவருக்காக நம்மை ஒரே மேடையில் பேச வைத்திருக்கிறது.
திரு.தொல்.திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்
உலகில் எவரும் இதயத்தை இரவலாகக் கேட்டதில்லை. எதையும் தாங்கும் இதயத்தை அண்ணாவிற்கான இரங்கற்பாவில் இரவல் கேட்ட தலைவன். அண்ணாவின் அருகில் அடக்கம் பெற அத்தனை சோதனைகளிலும் வெற்றி பெற்றவர். தரம் கொண்ட நூலகத்தை ஏற்படுத்தித் தம்மை வளர்த்து ஆளாக்கிய குருவான தலைவருக்கு அவர் பெயரால் ’’அண்ணா நூற்றாண்டு நூலகம்’’ எனப் பெயர் சூட்டி நன்றி காட்டியவர் கலைஞர்.
திரு.கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.
தமிழினத்தின் தவப்புதல்வர். அவரின் ஆளுமை ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் உள்ளது. அதில் தனித்துவமாக உள்ளவர். சிறுபான்மை இனத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கலைஞர்
திரு.ப.அப்துல் சமது பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
ஒவ்வொரு துறையாக இஸ்லாமியர்களின் வளர்ச்சியை இடஒதுக்கீட்டின் மூலமாகக் கொண்டு சேர்த்தவர் கலைஞர். அந்த நன்றியை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை அனைத்து இடங்களிலும் உறுதிப்படுத்தியவரும் அவர்தான்
திரு.ஜி.கே.வாசன் தலைவர்,தமிழ் மாநில காங்கிரஸ்
டெல்லியைத் தமிழகம் உற்று நோக்கிக் கொண்டிருந்த காலத்தை மாற்றி, டெல்லியே தமிழகத்தை உற்றுப் பார்க்கும் அளவுக்கு
நிலைமையை மாற்றிய தலைவர்கள் காமராஜரும் கலைஞரும்தான். என் தந்தையோடு நட்போடும், பண்போடும் பழகிய கலைஞர், வயது வித்தியாசம் பாராமல் என்னையும் அரவணைத்தார்.
திரு.தி வேல்முருகன் தலைவர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தி.மு.க மேடையிலிருந்த கலைஞரிடம், ‘நான் பா.ம.க.விலிருந்தபோது உங்களை விமர்சித்துப் பேசியவன்’ என்றேன். அதற்கு அவர், ’உன் இடத்தில் நான் இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்’ என்றார். அப்படிப்பட்டது அவரது ஆளுமை.
திரு.சுப.வீரபாண்டியன் தலைவர்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை
அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்து அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுகிற வகையிலும், பிள்ளைகள், தங்களின் வகுப்புப் புத்தககங்களைக் கொண்டுவந்து படிப்பதற்கு ஏதுவாக இரண்டு மேசைகளையும் அமைத்திருந்தார் கலைஞர். உட்கார்ந்து, படிக்க, வசதியற்ற பிள்ளைகள் வெளிச்சத்தில் நாற்காலியில் அமர்ந்து படிக்கட்டும் என்கிற கருணை உள்ளத்தில் அப்படி அமைத்திருந்தார். ஒரு சமூகத்தையே கல்வியறிவு பெற்ற சமூகமாக மாற்றியவர் கலைஞர்.
திரு.கு.செல்லமுத்து தலைவர்,உழவர் உழைப்பாளர் கட்சி
25 லட்சம் பம்பு செட்டுகளுக்கு, 25 ஆண்டு காலமாக இலவச மின்சாரம் வழங்கி ஏழை, எளிய விவசாயிகளைக் காத்த கருணைக் கடவுள் கலைஞர் அவர்களை உயிர் உள்ளவரை விவசாயிகள் மறக்கமாட்டார்கள்
பேராயர்.எஸ்ரா.சற்குணம் இந்திய சமூகநீதி பேரியக்கம்
சாதித்துவத்தின் சதிகளை நம்பாமல் சமூதாயத்திற்காக ஓயாமல் பாடுபட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் வறுமையை ஒழிப்பதற்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர் கலைஞர்.
திரு.பொன்.குமார் தலைவர்,கட்டட விவசாயத் தொழிலாளர் கட்சி
அரசியல் தளம், ஆட்சித் தளங்களில் கலைஞர் பல சாதனைகளைச் செய்து இருந்தாலும், இந்த இனத்திற்காகத் தம்மைப்போல உழைக்க ஒரு தலைவனை அடையாளம் காட்டிச்சென்றது தான் அவர் செய்த சாதனைகளில் மாபெரும் சாதனை.
திரு.அதியமான் தலைவர், ஆதித்தமிழர் பேரவை
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக அருந்ததியர் மக்கள் இருப்பதாகக் கூறி, உள் ஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கலைஞர். அந்த முடிவை எடுக்கும்போது பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றையெல்லாம் புறம்தள்ளி அருந்ததியர் மக்களின் நலனை நிலைநாட்டினார்.
திரு.எர்ணாவூர் நாராயணன் தலைவர், சமத்துவ மக்கள் இயக்கம்.
தமிழனின் கடைசி மூச்சு இருக்கும் வரை கலைஞரின் புகழ் வாசிக்கப்பட்டும், நேசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்.
திரு.இனிகோ இருதையராஜ் தலைவர்,கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்.
சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக எல்லா நிலையிலும் திகழ்ந்தவர். மதச்சார்பற்ற நம்முடைய கொள்கைக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்ததோ, அப்போதெல்லாம் முன்னின்று காத்தவர்.
திரு.பி.வி.கதிரவன் தலைவர், பார்வர்ட் பிளாக்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று கல்வி கற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்கள் கோலோச்சுகிறார்கள் என்றால், அதற்குக் கலைஞர் ஒவ்வொரு பகுதிகளிலும் கல்லூரி அமைத்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதே காரணம்.