முரசொலியில் இருக்கிறேன்
முரசொலி – இரண்டாம் உலகப் போரின்போது பிறந்த ஏடு. அதனால்தான் அதனுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முரசொலி – துண்டறிக்கையாய்ப் பிறந்த ஏடு. அதனால்தான் இன எதிரிகள் மீது குண்டு வீசிக் கொண்டே இருக்கிறது.
முரசொலி – கலைஞரின் மூத்தபிள்ளை. அவர் தலைவர் ஆவதற்கு முன்னால், முதல்வர் ஆவதற்கு முன்னாள், தந்தை ஆவதற்கு முன்னால், கதாசிரியர் ஆவதற்கு முன்னால், பத்திரிகையாளர். முதல் முதல், இறுதி இறுதி வரையில் பத்திரிகையாளர்.
‘சின்ன வயதிலேயே நாட்டுக்குச் சொல்வதற்குக் கருத்துகள் இருந்தது என் தம்பி கருணாநிதிக்கு’ என்று கண்டுபிடித்துச் சொன்னார் பேரறிஞர் அண்ணா. சின்ன வயதில் மட்டுமல்ல, 90 தாண்டியும் சொல்வதற்கு – செய்வதற்குக் கலைஞருக்குக் கருத்துகள் இருந்தன.
‘எனது செங்கோலை எவரும் பறிக்கலாம்.
எழுதுகோலைப் பறிக்க எவரும் பிறக்கவில்லை’ என்றார் கலைஞர்.
பறிக்கக்கூடியதா அவரது எழுதுகோல்? பறக்கக்கூடியது!
தமிழ்வானில் பறந்து கொண்டே இருந்தது அவர் பேனா! அதனால்தான் இறுதியாய் அவரது சட்டைப் பையில் பேனா வைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவரது முரசொலி! அதனால்தான் இறுதியாய் அவரது கைக்குப் பக்கத்தில் அன்று வெளியான முரசொலி வைக்கப்பட்டது. பேனாவும், முரசொலியும் பறிக்கப்பட்டால் துடித்துப் போவார்.
தினமும் காலையில் அண்ணா அறிவாலயத்தையும், முரசொலி நாளிதழ் அலுவலகத்தையும் பார்க்கா விட்டால் தலைவர் கலைஞரால் அந்த நாள்களை இழந்த நாளாகக் காணப்படும்.
அவரைத் தேடி அறிவாலயக் கதவும், முரசொலிக் கதவும் காத்திருக்கின்றன. அந்தக் கனவைப் போக்க அறிவாலயத்தில் டிசம்பர் 16, 2018 அன்று சிலையாய் எழுந்தார் கலைஞர். ‘முரசொலி’ அலுவலகத்தில் ஆகஸ்ட் 7 – 2019 அன்று சிலையாய் எழப்போகிறார் கலைஞர்.
அறிவாலயத்தில் கம்பீர நா முழக்கத்துடன் எழுந்து நிற்கும் கலைஞர்;
முரசொலி அலுவலகத்தில் எழுத்தாணி கொண்டு அமர்ந்து காட்சி தருகிறார்.
‘‘அறிவாலயத்தில் பேச்சாய் இருக்கிறேன்!. முரசொலியில் எழுத்தாய் இருக்கிறேன்!.’’
– என்கிறார் கலைஞர்.
வரலாற்றில் சில நிகழ்வுகள் தாமாக நடக்கும். அதற்கு உதாரணமாக இரண்டு. 1948ஆம் ஆண்டு முரசொலி வார இதழைத் திருவாருரில் அச்சடித்துத் தந்தது கருணை எம்.ஜமால். அவர் தமது அச்சகத்திற்கு வைத்திருந்த பெயர் ‘கருணாநிதி அச்சகம்.’ அச்சமற்ற கலைஞரின் எழுத்துகள் கருணாநிதி அச்சகத்தில் அச்சிட்டே வெளியாயின. கருணாநிதி அச்சகம் என்பது தானாக அமைந்தது.
இதோ! இப்போது முரசொலி அலுவலகத்தின் உள்ளேதான் கலைஞரின் சிலை அமைகிறது. இதை ஊரே பார்த்துச் செல்லலாம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பயணம் செய்வோர் அனைவரும்
‘முரசொலி’யைக் கடக்கும்போது கலைஞரின் மூச்சொலியைக் கேட்கலாம். முகத்தைத் தரிசிக்கலாம். அந்தப் பாலம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுவிட்டது. இதுவும் தானாக அமைந்தது. அவருக்கு எல்லாமே தானாக அமையும். அவர்தான் கலைஞர்!
ஓராண்டு நினைவு நாளில் ‘முரசொலி’ அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை எழுகிறது; எழுப்புகிறார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். இங்கு மட்டுமல்ல, எங்கெங்கும்; கலைஞர் மூச்சுக் காற்று சுற்றிய தமிழகத்தின் பல இடங்களிலும் சிலையாக, நிலையாக எழ இருக்கிறார்!.
தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் கடலில் தூக்கி வீசினாலும், அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்.!
தமிழர்களே! தமிழர்களே!
என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்- அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.!
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்துத் தின்று மகிழலாம்.!
‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’