தமிழரின் புகழ் வானம் இடிந்தது
திரு.பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர்
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் அவர். கடந்த 70 ஆண்டுகளாக இருந்த பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பிரபலமானவராகத் திகழ்ந்தார். தமிழக மக்களின் துயரத்தில் இந்திய நாடே பங்கெடுக்கிறது.
திரு.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய தலைமகன் தலைவர் கலைஞர். எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்துக்கு உயர்ந்தார் என்றால், அதற்குக் காரணம் அவரின் உழைப்பு. நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அந்தப் பகுத்தறிவாளர்.
திரு.எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து நான் வேதனை அடைந்தேன். அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம், தமிழ்த் திரைப்படம் ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்தியவர் கலைஞர். தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் முத்திரை பதித்தவர். அவரது மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பாகும்.
திரு.சு.திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
சமூக நீதிக் காவலராய், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய்த் திகழ்ந்தவர். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை நல்கி, சொத்தில் சம பங்கு தந்தவர் கலைஞர். தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை அண்ணன் கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமதி. தமிழிசை சவுந்தரராஜன்
மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
அரசியலில் உதயசூரியனாகவும், பல லட்சம் தொண்டர்களின் இதய சூரியனாகவும் விளங்கிய கலைஞர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கிறது. முத்தமிழ் அறிஞரின் சங்கத்தமிழ் இனிக் கேட்க முடியாது என்பதை நம்பவும் இந்தத் தமிழகம் மறுக்கிறது. தோல்விகளையே காணாத தலைவன் இன்று பல லட்சம் தொண்டர்களின் மனதையும் வென்றுவிட்டுத்தான் சென்று இருக்கிறார். எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் இவரது பங்கு அரசியலில் இருந்திருக்கிறது. அவரது மறைவு தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே பேரிழப்பு.
திரு.வைகோ
பொதுச் செயலாளர் – மறுமலர்ச்சி தி.மு.க
தமிழரின் புகழ் வானம் இடிந்தது. தமிழரின் சகாப்தம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. தமிழ் இலக்கிய இமயம் சாய்ந்தது. சங்கத்தமிழும், குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர்சங்கரும், தென்பாண்டிச்சிங்கமும், பாயும் புலி பண்டாரக வன்னியனும் எனச் செந்தமிழ் மொழிக்கு அழியாக் காவியங்களையும் கலையுலகில் புரட்சிப் படைப்புகளையும் வாசிப்போர் நரம்புகளில் மின்னலைப் பாய்ச்சும் உடன்பிறப்பு மடல்களையும் தீட்டிய எழுதுகோல் ஒடிந்தது. தமிழ்த்தாயின் கரம் ஏந்திய இலக்கிய வீணையின் நரம்பு அறுந்தது. தமிழினம் ஏந்திய வில் முறிந்தது.
திரு.கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கலைஞரின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தலைசிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகை யாளராகவும், கலைத்துறை வித்தகராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கலைஞர் மறைந்தார் என்ற செய்தி மனதளவில் ஏற்றுக் கொள்ளமுடியாத துயரச் செய்தியாகும். தமது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வெற்றிகண்ட அவர், தமது உடல் நலப் பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். நமது நம்பிக்கை பொய்யாகி விட்டபோதிலும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் கருணாநிதி நீங்காமல் நிலைத்து நிற்பார்.
திரு.தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள்
எண்பது ஆண்டுகள் பொதுவாழ்க்கை; எனினும் ஒவ்வொரு நொடியும் போராட்டம்! எத்தனை எத்தனை இடர்கள்; தடைகள்! எத்தனை எத்தனை சதிகள்; பழிகள்! அனைத்தையும் தகர்த்துத் தவிடு
பொடியாக்கி அரசியல் சிகரத்தின் உச்சத்தைத் தொட்ட ஆற்றலாளர் தலைவர் கலைஞர். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!
திரு.பழ.நெடுமாறன்
தலைவர், தமிழர் தேசிய முன்னணி
தமிழகத்தின் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மருத்துவர் ச.ராமதாஸ்
நிறுவனர் – பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்தியதிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கியதிலும் கலைஞரின் பங்கு மகத்தானது. கடந்த ஜூலை 29-ம் தேதி காவிரி மருத்துவமனைக்கு நான் நலம் விசாரிப்பதற்காகச் சென்றபோது, அவரது உடல்நிலை திடமாக இருப்பதாகவும், விரைவில் இல்லம் திரும்புவார் என்றும் ஸ்டாலின் கூறினார். அவர் விரைவில் நலம்பெற்று வருவார் என நம்பிக்கொண்டிருந்த வேளையில்தான் அவரது மறைவுச் செய்தி நம்மையெல்லாம் தாக்கியிருக்கிறது. அவரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
திரு.கே.எம்.காதர் மொகிதீன்
திராவிடத் தத்துவத் தலைவராக,
நிறைவான ஜனநாயகவாதியாக, பண்பட்ட பகுத்தறிவு சூரியனாக இருந்த அவரின் ஒவ்வொரு வார்த்தையும் வெற்றி வாழ்வுக்கான
படிகளாக அமைந்திருக்கின்றன. கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களுக்குப் பேரிடியாக அமைந்துவிட்டது.
திரு.விஜயகாந்த்
தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கலைஞர் காலமானார் என்கின்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். அவர் மண்ணுலகு விட்டு மறைந்தாலும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாது.
திரு.எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
கலைஞரின் மறைவு ஒவ்வொரு தமிழருக்கும் சமூக நீதிப் போராளிகளுக்கும் தனிப்பட்ட இழப்பாகும்.
திரு.டி.டி.வி.தினகரன்
துணைப் பொதுச் செயலாளர், அமமுக
தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
திரு.ஜி.கே.வாசன்
தலைவர், தமிழர் மாநில காங்கிரஸ்
கலைஞரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் கலைஞர் ஆற்றிய பங்கு சிறப்பானது. அரசியல், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றுக்காகச் சமரசம் செய்து கொள்ளாத போராளி அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.பாரிவேந்தர்
தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி
கலைஞர் இல்லாத தமிழகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன்
பொதுச் செயலாளர், கொ.ம.தே.க.
கலைஞரின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு ஆகும்.
அவருடைய வாழ்க்கைப் பாதை, அரசியல் பாதை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். கலைஞரின் மறைவைத் தாங்கக்கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்.
திரு.கமல்ஹாசன்
தலைவர், மக்கள் நீதி மைய்யம்
நாட்டுக்கு ஒரு தலைவரை இழந்ததுபோக, தனிப்பட்ட முறையில் குடும்பத் தலைவரை இழந்துள்ளோம். அந்தத் தமிழைப் பற்றி, மேலே ஏறி வந்தவன் நான்.
திரு.வேல்முருகன்
தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி யும், தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவருமான கலைஞரின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.
திரு.சுப.வீரபாண்டியன்
தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
கலைஞர் வாழ்வின் முதல் பாகம்தான் முடிந்திருக்கிறது. இரண்டாவது பாகம் இன்றுதான் தொடங்கி இருக்கிறது. அவர் விட்டுச் சென்ற வரலாற்றைக் காலம் எழுதும்.
திரு.எஸ்றா சற்குணம்
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர், திராவிட மும்மூர்த்திகளில் மூன்றா மாவர், எனது அரசியல் ஆசான்..! என் போன்ற சாமானியர்களையும் ஊக்குவித்து திராவிட இயக்கத்தின் இலட்சியத்தை அடைய தமிழின மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். சமயச் சிறுபான்மையினரின் நம்பிக்கை நாயகன்.