காற்றாலை மின்சாரம்
தமிழகத்தில் நெல்லை, குமரி, தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் 7327 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜூனு, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதம் மாதம் வரை காற்றாலை சீசன் துவங்கும். அப்போது காற்று பலமாக வீசும் என்பதால் காற்றாலை மின்நிலையங்களிலிருந்து நாள்தோறும் 3000-4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் 3-10 ரூபாய் என குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் சீசனின் போது காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்தும் மின் வாரிய அலுவலர்கள் அதை வாங்காமல் பி.பி.என். சமல்பட்டி, மதுரை பவர், ஜி.எம்.ஆர். நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் 12 ரூபாய் என்ற அதிக விலைக்கு வாங்குகிறார்கள். 5 மாதங்கள் வரக்கூடிய காற்றாலை மின்சாரத்தை மின்வாரிய அதிகாரிகள் வாங்காததால் காற்றாலை அதிபர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தனியாரிடமிருந்து 12 ரூபாய் என அதிக விலை கொடுத்து வாங்குவதால் மின்வாரியத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம்.
மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகரிப்பது வழக்கம். பொதுவாக விநாடிக்கு 3 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால்தான் காற்றாலைகளில் மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது விநாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் கூட மின் உற்பத்தி செய்யக்கூடிய வகையில காற்றாலைகள் உள்ளன. சீசன் வேளையில் காற்றின் வேகம் விநாடிக்கு 10 மீட்டர் அளவில் உள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும்.
மின் வாரியத்தில் பம்பிங் கெப்பாசிட்டி குறைவாக உள்ளது. இதனால் 100 யூனிட்டுக்கு 30 யூனிட் மட்டுமே பம்பிங் செய்ய முடிகிறது. இதனால் பெரும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. காற்றாலை மின் உற்பத்திக்கு தகுந்தவாறு மின் கட்டமைப்பு வசதிகளை மின் வாரியம் இன்னும் மேம்படுத்தவில்லை. என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. தேவையான மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பெற முடியும். இது சுலபமாக முடியக்கூடிய காரியமே. இதில் மின் வாரியம் முழு கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சதர்ன் ரீஜன் பவர் கமிட்டி நிறுவன அதிகாரிகள் தமிழகத்தில் உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை மின்வாரியம் எங்களிடம் அளித்தால் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து தரப்படும் என மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தமிழக மின்வாரியம்/மத்திய மின்துறை இவைகள் மூலம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் தமிழக காற்றாலை மின்சாரத்தை பெறமுடியும் என்கிறபோது, அந்த காற்றாலை மின்சாரம் முழுமையும் நமது மின்வாரியமே கொள்முதல் செய்யலாமே? தயங்குவதற்கு என்ன காரணம்?
அதை விடுத்து அதிக விலை கொடுத்து பி.பி. என், சமல்பட்டி, மதுரை பவர், ஜி.எம்.ஆர் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து, தமிழ்நாடு மின்வாரியம் மின் கொள்முதல் செய்வதின் காரணம் தான் என்ன? இதனால் மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பிற்கு யார் பொறுப்பு?