ஆதி திராவிடர் பழங்குடியினர்.இட ஒதுக்கீடு
திராவிடர்கள் என்றால் இந்த நாட்டை ஆண்டவர்கள். ஆதி திராவிடர்கள் என்றால் அவர்களுக்கு முன்பே இந்த நாட்டில் செல்வாக்கு மிக்கவர்கள். மரியாதைக்குரியவர்கள். ஆகவே அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை.
ஆனால் காலப்போக்கில் வைதீகர்கள் ஆக்ரமிப்பால் ஆதி திராவிடர்கள் முகத்தை தொலைத்து விட்டு முகவரியை தேடினர் கேள்விக்குறியாய் முதுகு வளைந்து காரணம் தெரியாமல் அடிமைகளாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உயர்சாதி பிரிவினரிடையே கூனிக் குறுகி உடல் முழுவதுமாக துணியை மூடிடவும் இயலாமல், காலில் செருப்பு அணிவதையே எண்ணிப் பார்க்காத நிலையில் மனதில் தைரியமின்றி வாழ்ந்திருக்கிறார்கள்.
பிறப்பால் உயர்வு தாழ்வு; தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்கள் மாராப்பு போட்டுக்கொள்ளக்கூட போராட வேண்டியிருந்தது; தெருக்களிலும் கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று தீண்டாமை மக்களைச் சீரழித்து வந்தது.
இப்படி மதி இழந்து மானமும் இழந்து நாம் ஆதியில் இந்த நாட்டை ஆண்டவர்கள் என்னும் நினைவும் மறந்து மறைவில் இருந்தொருவன் கயிற்றால் ஆட்டுவித்திட ஆடும் மரப்பாவை போன்று ஏன் என்றும் எதற்கென்றும் எப்படியென்றும் கேட்கவும் திறனின்றி நாயினும் கீழாக “அடிமைப்பட்டிருந்த தமிழனுக்கு சூடேற்றி சுரணை ஏற்படுத்தி சுயமரியாதை உணர்வூட்டி நீயும் ஒரு மனிதன்; ஆறறிவு படைத்தவன்; புழுவன்று; பூச்சியன்று; எழு, எழு, விழி, உலகைப் பார், உரிமை கொள்” என்று எழுச்சியூட்டினார் உலகம் கண்டிராத அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாரைப் பின்பற்றி பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் இந்த சமுதாயத்திற்காக தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கல்வி வேலைவாய்ப்பில் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மேலும் சலுகைகள் பெற்று தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 16 சதவிகிதம் என்றிருந்ததை 18 சதவிகிதம் என்று உயர்த்தியதோடு, பின்னர் பழங்குடியினருக்கென்று தனியாக 1 சதவீதத்தை ஏற்படுத்தி அந்த 18 சதவீதத்தையும் ஆதி திராவிடர்களே அனுபவிக்கச் செய்த பெருமை கலைஞருக்குண்டு.
ஆதி திராவிடர்களுக்கு 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதம் என்றும் மொத்தம் 19 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுப் பலன்களை இப்போது அனுபவித்து வருகிறார்கள். இது ஏற்கனவே இருந்ததைவிட 3 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதம் மாறிய சீக்கியர்களை 1956லும், புத்தமதம் சார்ந்த தமிழ் மக்களை 1990லிலும் பட்டியலில் சேர்த்து உரிமை வழங்கியது போல், கிறிஸ்துவ தலித் மக்களையும் பட்டியலில் சேர்த்து உரிமை வழங்கவேண்டும் என்றும், இதுசம்பந்தமாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த உரிமைகளைப் பெறுவதற்கு தடையாக உள்ள 1950-ம்ஆம் வருடத்திய குடியரசு தலைவரின் ஆணையை நீக்க வேண்டும். என்றும் கலைஞர் வழங்கிய அறிவுரைகளின்படி நாடாளுமன்றத்தில் டி.ஆர.பாலு அவர்கள் நடுவண் அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.