மண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு
தலைவர் கலைஞர் அவர்களது பெருமுயற்சியால் அன்றைய பாரதப் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் மண்டல் கமிசன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் அறிந்ததே. மண்டல் கமிசன் சிபாரிசினை ஏற்று அரசியல் சட்டப்பிரிவு 16(4)ன்படி, மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 27 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கப்பட்டது. இதனை முன்னிட்டுத் தான் பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசுக்கு, அளித்து வந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு.வி.பி.சிங் ஆட்சியே கவிழ்ந்தது. இந்த மண்டல் கமிசன் 27 சதவிகித இட ஒதுக்கீட்டின்படிதான் பிற்படுத்தப்பட்டவர்களால் கூடுதலாக ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிந்தது. மத்திய அரசின் அனைத்து பிரிவுகளிலும் இன்றைக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் இந்தியா முழுவதும் ஏராளமானோர் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடும் என மொத்தம் 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும். முறை ஏற்கனவே, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் மண்டல கமிசன் சுபாரிசுபடி மத்திய அரசியல் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கு என மொத்தம் 27 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது மிக மிக குறைவு.
மத்திய அரசியல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மண்டல கமிசன் தனது அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோரில் கல்வி, பொருளாதார சமூக நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு சம்மந்தமான இந்திரா சௌஹனி வழக்கில் உச்சநீதிமன்றமும் மண்டல் குழு அறிக்கையின்படி மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
எனவே மத்திய அரசியல் கல்வி வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை முதல் கட்டமாக 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், அப்படி 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு அந்த 50 சதவிகிதத்தில் தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்படுவது போல மத்திய அரசியலும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (OBC) என்ற பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு 20 சதவிகித தனி உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும். என்றும், அதனை மத்திய அரசிடம் வற்புறுத்தி வாதாடிப் பெற்றுத் தருவோம். என்றும் தேர்தல் வாக்குறுதி வழங்கிய கட்சி இந்தியாவிலேயே திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே.
தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு! மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர் கலைஞர் வலியுறுத்தல்!
“தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய அரசை சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தனியார் துறையில் இயங்கும் பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் திரு.ஷகீல் உஸ்மான் அன்சாரி அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது “அரசு வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்து விட்ட சூழ்நிலையில், தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர். பழங்குடி இனத்தவருக்கு மட்டுமின்றி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கோரிக்கையைத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்களும் பல ஆண்டுகளாக எடுத்துரைத்து வருகிறார்கள். உண்மையில் கூறப்போனால், திராவிட முன்னேற்றக் கழகம் 2014-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பது மிக மிகக் குறைவானதாகும். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டாயம் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்.
அப்படி வழங்குவது மட்டுமே சமூக நீதியின் நியாயமான முழுமையான வெளிப்படாகும். இத்தகைய இட ஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கிய குடியரசில் ‘Affirmative Action’ நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும், கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை தி.மு.க கழகம் வலியுறுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதற்காகத் தீர்மானங்களை நிறைவேற் றியிருக்கிறோம். இந்த நிலையில் தனியார். நடத்தும் பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக வந்துள்ள செய்தி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
நடைமுறைக்கேற்ப இந்தப் பரிந்துரையினை மத்திய பா.ஜ.க. அரசு, குறிப்பாக இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஏற்று, முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவன் என்ற முறையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பிரதமரை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி அதிமுக ஆட்சி காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னிய தலைவர்களை 1989-ம் ஆண்டு கலைஞர் மீண்டும் முதலமைச்சர் ஆனவுடன் அழைத்துப் பேசினார். அவர்கள் மீது போடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிம்மதி அளித்தார். போராட்டத்தில் இறந்தவர்களை சமூகநீதி தியாகிகளாக அறிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த 27 பேர்களது குடும்பங்களுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். மேலும் அந்த 27 குடும்பத்தினருக்கு மாத ஓய்வூதியமாக தலா 1500 ரூபாய் வழங்கவும் ஆணையிட்டார். 2009.ல் இந்த ஓய்வூதியம் 2000 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றைக்கு அவர்கள் 3000 ரூபாய் பெற்று வருகிறார்கள்.
வன்னியர்களை வைத்து அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் துப்பாக்கிச் சூட்டில் இறந்த போனவர்களைப் பற்றி கண்டு கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரித்து அரவணைத்து பாதுகாத்தவர் நமது தலைவர் கலைஞர் மட்டுமே.
மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமன் அவர்களை கேபினட் அமைச்சராகவும், ராஜமோகன் என்ற வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவரை தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாகவும், காசி விஸ்வநாதன் என்ற வன்னிய சமுதாயத்தைச் சேர்நதவரை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தலைவராகவும், மேலும் 3 பல்கலைக்கழகங்களிலும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக்கி ஆக்கி அழகு பார்த்தவர் தலைவர் கலைஞர் திமுக அமைச்சரவையிலும் 3 பேர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.