சிறுபான்மையினருக்கு நல உதவிகள்
அரசு சார்பில் மானியத்துடன் கடன் வழங்கி அதன் மூலம் கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு காணவேண்டும்.. என்பதற்காக கழக ஆட்சியில் 1.7.1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. 2001-ல் அமைந்த அதிமுக அரசு இந்த சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்து அதன் முக்கியத்துவத்தை குறைத்தது. எனினும் 2006-ல் அமைந்த திமுக அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை மீண்டும் தனித்து செயல்பட ஆணையிட்டது.
கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக 1.8.2007 முதல் சிறுபான்மையினர் நல இயக்கம் ஒன்று கழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
மத்திய அரசு நிதி உதவியுடன் தொழில் பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களில் 7090 பேருக்கு 2007-2008-ம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை 18 கோடியே 53 லட்ச ரூபாய் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
மத்திய அரசு நிதி உதவியுடன் பதினோரம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களில் 67 ஆயிரத்து 683 பேர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 2007-08-ம் ஆண்டு முதல் 22 கோடியே 22 லட்ச ரூபாய் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்று 2008-2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 15,340 மாணவ மாணவியர்க்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இத்திட்டம் குறித்து சிறுபான்மையின் மக்களிடையே திமுக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக 2009-2010-ம் ஆண்டிற்கு 1,54,264 மாணவ/மாணவியர்களுக்கு ரூ.18.90 கோடியும், 2010.11-ஆம் ஆண்டிற்கு 2,42,301 சிறுபான்மையின மாணவ/மாணவியர்க்கு ரூ.28.62 கோடியும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு போன்றவற்றில் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக வேலையில்லாத சிறுபான்மை மாணவ/மாணவியர்களுக்கு ரூ.2.50 கோடி செலவில் பயிற்சி அளிப்பதற்காக “தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி திட்டம்” ஒன்று 2007-2008-ம் ஆண்டு கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. மேலும் மேற்கண்ட துறைகளில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக ரூ.2.50 கோடி செலவில் மற்றொரு திட்டமும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4½ ஆண்டுகள் 10 கோடி செலவில் 41,316 பேர் பயனடைந்தார்கள்.
கழக ஆட்சியில் மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் சட்டப்படியான அங்கீகாரத்துடன் மாநில சிறுபான்மையினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்கள் தலைமையில் உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாணையம் 1.8.2010 முதல் செயல்படத் தொடங்கியது.
மத்திய அரசின் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.எஸ்.ஏ.சித்திக் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த குழுவினர் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றில் முழு மன நிறைவு கொண்டு, திமுக அரசு சிறுபான்மையினருக்காக (Pro Miniority) பாடுபடும் அரசு என்று பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உறுப்பு 30கூறு(1)ன் படி, சிறுபான்மை மக்களின் கல்வி பணிக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 7000 பள்ளிகளை சிறுபான்மையினர் 150 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.
1991-ம் ஆண்டு அரசாணை எண்.906ன்படி, இனிமேல் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்கள் அரசின் நிதி உதவி கோரமாட்டோம், என உறுதிமொழியை அளித்தால் மட்டுமே அரசு உரிமம் வழங்கும். என அதிமுக அரசு உத்தரவிட்டதால் சிறுபான்மையினர் பலவகையிலும் பாதிக்கப்பட்டனர். அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியால் அவர்கள் பெரிதும் துன்பத்திற்குள்ளாயினர்.
திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் “1991க்கு பிறகு சிறுபான்மையினர் சமுதாயம் சார்பில் தொடங்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மானியம் தர வேண்டும்.”
தலைவர் கலைஞர் அவர்கள் இவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 1991 முதல் 1999 வரை சிறுபான்மையினரால் தொடங்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரத்துடன் மானியமும் வழங்கி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று சட்டப்பிரிவு 14(அ) என்ற உட்பிரிவுகளை நீக்கி 282.2011 தேதியில் அதற்கான அரசாணையினைப் பிறப்பித்து உதவினார்.
பின்னர் அந்த திட்டத்தை நிறைவேற்ற 331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 11,307 ஆசிரியர்கள், 648 ஆசிரியல்லாத பணியாளர்கள் ஆகியோரை சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்க கலைஞர் அனுமதி வழங்கினார். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகள் நிலைகுறித்து அடுத்து வரும் ஆண்டில் முடிவு செய்வதாகவும் அரசாணையில் உத்தரவாதம் வழங்கி இருந்தார்கள்.
அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு சிறுபான்மை சமுதாயத்தினரும் பேராயர்களும் இதைச் சுட்டிக் காட்டிய நேரத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், “நீங்கள் மானியம் வேண்டாம். என்று கூறி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளீர்கள்” என்று கூறி அந்த உத்தரவுகளை ரத்து செய்து விட்டார்கள். “ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்பார்களோ! அது இதுதானோ!