கை ரிக்சா ஒழிப்பு
ஒரு காலத்தில் சென்னையிலும், கடலூரிலும் 2000க்கும் மேற்பட்ட கைரிக் ஷாக்கள் ஓடிக்கொண்டு இருந்தன. சென்னை நகர தார்ச்சாலைகளில் உச்சி வெயிலில் கொழுத்த உருவம் கொண்ட ஒரு மனிதனை உட்கார வைத்து ஒட்டிய உடல் கொண்ட இன்னொரு வலுவிழந்த மனிதன் அந்த ரிக்சாவை இழுத்துச் செல்லும் கொடிய கட்சி நெஞ்சை உலுக்கக் கூடியதாக இருந்தது. இப்படி தினம் தினம் இந்த தொழிலில் அல்லல்படும் அந்த தொழிலாளி தமக்கு சைக்கிள் ரிக் ஷாவோ ஆட்டோ ரிக்சாவோ வழங்கிட வேண்டுமென கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 3.6.1973 முதல் அந்த கைரிக் ஷாக்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி கைரிக் ஷா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக் ஷாக்களையும் வழங்கினார்கள்.
சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழலும் சாதாரண சாமான்ய நடுத்தர மக்களின் நல்வாழ்வைக் குறித்தே எந்நேரமும் சிந்தித்து செயலாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் பூத்த புரட்சிகரமான திட்டம் இது. மனிதாபிமானத்துடன் கலைஞர் எடுத்த நடவடிக்கை இது. மனிதனை அமர்த்தி மனிதனே இழுக்கும் அவலத்துக்கு கலைஞர் முற்றுப்புள்ளி வைத்த நாள் இது.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் அப்போதைய ராஜாஜி மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் சைக்கிள் கைரிக் ஷாக்களை தலைவர் கலைஞர் கரங்களிலிருந்து இலவசமாக பெறுவதற்கு வந்த பாட்டாளி தோழர்கள் அதற்கு முன்பாக தாங்கள் இழுத்து வந்த கைரிக் ஷாக்களை அரசிடம் ஒப்படைத்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சைக்கிள் ரிக் ஷாக்களை கழக அரசு ஒழித்ததின் நினைவாக அந்த கைரிக் ஷாவினை கலைஞர் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைத்ததையும் இவ்வேளையில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தொழிலாளர்களின் உரிமைக்காக எந்நாளும் முழக்கமிடும் பொதுவுடமை இயக்கங்கள் ஆண்ட மேற்குவங்கத்தின் கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் கூட பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் கைரிக் ஷாக்கள் இழுத்து பிழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.